Thursday 19 April 2012

போக்குவரத்துத் தொழிலாளர் குமுறல்



தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சனைகள் தீரும் என்ற எதிர்பார்ப்பு தொழிலாளர்களிடம் இருந்தது. அதற்கு நேர்மாறாக தமிழக அரசு மற்றும் கழகங்களின் செயல்பாடுகள்அமைந்துள்ளன.அண்ணா தொழிற்சங்க முன்னணி ஊழியர்களின் செயல்பாடுகளும் தொழிலாளர் நலனை சார்ந்திராமல்தங்கள் கட்சியின் ஆட்சியை பாதுகாக்கும் வகையிலேயே உள்ளது. திமுக ஆட்சியில் இதுவரை இல்லாத புதுமையாக ரிசர்வ் தொழிலாளர்களாக சுமார் 42,000 பேரை ஓட்டுநர்- நடத்துநர்களாக பணிநிய மனம் செய்து, குறைந்த கூலிகொடுத்து சுரண்டும் நிலையினை போக்குவரத்துக் கழகங்களில் அமலாக்கினர்.

அன்றைய அமைச்சர் கே.என்.நேருவிடம் பேச்சுவார்த்தையில் இது குறித்து
கேட்ட போது, கழகங்களில் தொழிலாளர்கள்ஓய்வு பெறும்போது அவ்விடத்தில் தினக்கூலி தொழிலாளர்களை அமர்த்தி நிரந்தரப்படுத்தியும், தினக்கூலி தொழிலாளர்இடத்தில் ரிசர்வ் தொழிலாளியை நம்பர் கொடுத்து சீனியாரிட்டி அடிப்படையில் அமர்த்தி பணி வழங்கப்படும் எனவிளக்கம் அளித்தார். இந்தப் போக்கை அப்போதே நாம் ஆட்சேபித்தோம்.கடந்த ஆட்சியின் அந்த தவறான நிலையைக்கூட தற்போது அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைத்துள்ளது.தினக்கூலி உள்ளிட்ட ரிசர்வ் தொழிலாளர்கள் தற்போதுஇருக்கும் நிலையிலேயே சுமார் 10 ஆயிரம் பேர் அளவிற்கு இரண்டு மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நிலை நீடிக்கிறது.நிர்வாகத்திடம் கேட்டால், அரசிடமிருந்து உத்தரவுகள் வந்தால் மட்டுமே முறைப்படுத்த முடியும் என்றுகூறுகிறார்கள்.

அதேபோன்று குறைந்தபட்சக்கூலிச் சட்டத்தின்படி கூட (தினச்கூலி /ரிசர்வ் தொழிலாளி) ஊதியம் வழங்கப்படவில்லை.மாநகர போக்குவரத்தில் ரூ.266, ரூ.265, மாவட்டக்கழகங்களில் ரூ.230, ரூ.225 மற்றும் அரசு விரைவு போக்குவரத்தில்ரூ.213, ரூ.212 என்ற விதத்தில் ஊதியம் கொடுக்கும் நிலை தொடர்கிறது. 
12(3) ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்டபடிதினக்கூலி வழங்கப் படுவதில்லை. இதற்கும் அரசிடமிருந்து உத்தரவு வரவேண்டுமென கூறுகிறார்கள்.

திரிசங்கு சொர்க்கத்தில்பென்சன் திட்டம்

மத்திய அரசின் புதிய பென்சன் திட்டத்தைக் கடந்த அரசுகள் அப்படியே ஏற்று புதிய தொழிலாளிகளை கழக பென்சன் திட்டத்திலிருந்து விலக்கி வைப்பதோடு, புதிய தொழிலாளிக்கு பிராவிடன்ட்பண்டு திட்டம் மறுக்கப்படுகிறது. 1998ம் ஆண்டுக்குப் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு கழக பென்சன் திட்டம் கட்டாயம் என்று ஒப்பந்த விதிகள் இருந்தும் 
ஆட்சியாளர்களின் கண்களில் தென்படவில்லை போலும்.1.4.2003க்குப் பிறகு பணிக்கு சேர்ந்த புதியவர்களை கழக பென்சன் திட்டத்தில் கொண்டுவராததால் பென்சனுக்குப் பணம் வரவு இல்லை. சீனியர்கள்    ஓய்வு பெறுவதால் டிரஸ்டிற்கு செலவு மட்டும் கூடிக் கொண்டே இருக்கிறது.சிலஆண்டுகளில் புதியவர், பழைய தொழிலாளி யாருக்கும் 
பென்சன் கிடைக்காத நிலையே உருவாகும். புதிய பென்சன் திட்டத்தைக்கைவிட்டு அனை வருக்கும் பழைய பென்சன்
திட்டமே பொருந்தும் என தமிழக முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவித்ததைப்போல் அமலாக்கவேண்டும்.

ஓய்வுபெற்ற தொழிலாளிக்கு சட்டப்படி / முறைப்படி கிடைக்க வேண்டிய கிராஜு விட்டி, வைப்புநிதி, கம்முடேசன் போன்றவைகள் கூட அக்டோபர் 2010லிருந்து கொடுக்காத நிலை கழகங்களில் தொடர்கிறது. பென்சன் பெறுகிற தொழிலாளர்களுக்கு பஞ்சப்படி 58 சதவிகிதம் கொடுக்காமல், 51 சதவிகிதம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கழக தலைமையகங்கள் முன்பு பெருந்திரள் முறையீடு செய்த பின்னரே இந்த 51 சதவிகித பஞ்சப்படி கிடைக்கிறது.பேருந்துகள் பராமரிப்புப் பிரிவிலும், தொழில்நுட்ப ஊழியர்கள் கழகங்களில் போதுமான இல்லாத நிலை தொடர்கிறது. ஒரு பேருந்துக்கு 1.25 என்றிருந்த டெக்னிக்கல் நார்ம்ஸ்காலப்போக்கில் (திமுக / அதிமுக அரசுகளில்) 
0.68 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கழகங்களில் 8000 தொழில்நுட்பப் பணியாளர் காலியிடங்களை நிரப்ப வேண்டிய நிலை உள்ளது. தனியார் மயம் - தாராளமயம் - உலகமயக் கொள்கை காரணமாக ஏராளமான பணிகள் காண்ட்ராக்ட் விடும் நிலை கழக மட்டங்களில் அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே இதை எதிர்த்து நாம்   வழக்குகள் தொடுத்து அவை விசாரணையில் உள்ளன. தடையும் பெற்றுள்ளோம். தற்போது நெல்லைக் கோட்டத்திலும் பராமரிப்பில் பெரும்பாலான பணிகள் காண்ட்ராக்ட் விட டெண்டர் விளம்பரம் செய்தித்தாள்களில் வந்துள்ளது.  Sole Representing Agent என்று கூறிக் கொண்டு கடந்த 22.1.2011 அன்று LPF போட்ட “வஞ்சனையான” 12(3) ஒப்பந்தத்தில் பென்சன், நார்ம்ஸ், பதவி உயர்வு, பணிக்கொடை, அலுவலர்  சீரமைப்பு, விருப்ப ஓய்வு, ஓய்வு பெற்றோர் பாஸ்,பயணச்சீட்டு ஆய்வாளர் (DI/CI) ஊதியம், குறைதீர்க்கும் குழு விபரங்களுக்கு கமிட்டி/ குழு அமைக்கப்படும் என்றும் அந்தக் குழு கூடி முடிவினை அரசுக்கு அனுப்பி, அதன்மீது அரசு முடிவெடுக்கும் என்று கூறப்பட்டது.எனினும் 15மாதங்களாகியும் இன்று வரை தமிழக அரசு அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முன்வரவில்லை.

கேண்டீன்

எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் மறைந்த அருமைத் தோழர் வி.பி. சிந்தன் அவர்கள் தலைமையில் சென்னை அண்ணாசாலை ஆர்ட்ஸ் காலேஜ் அருகில் இருந்து கடுமையான வெயிலில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தட்டேந்தி ஊர்வலம் பல்லவன் இல்லம் வரை வந்தோம். பணிமனை வாயில்களில் தட்டுகளையும், டம்ளர்களையும் கட்டி    தொங்கவிட்டோம். அரசு மற்றும் நிர்வாகத்தின் தாக்குதலுக்கு உள்ளாகியே சிஐடியு கேண்டீனை பெற்றுத்தந்தது. கழக நிர்வாகங்கள் நாளடைவில் கேண்டீனை காண்ட்ராக்டில் விட்டுவிட்டன.கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட சீர்கேடு இந்த ஆட்சியில் மேலும் அதிகரித்திருக்கிறது கேண்டீனில் தொழிலாளர்கள் உணவு தரமில்லையே என்று கேட்டால், அம்மாவை அசிங்கமாய் பேசினாய் என்று புகார்எழுதுவோம் என்ற விதத்தில் மாநகரக் கழகத்தில் மிரட்டல், கேண்டீன் கமிட்டி அமைக்கப் படவேண்டும், ஊழலும், சீர்கேடும் போக்கப்பட்டு தரமான உணவு தொழிலாளர்களுக்கு வழங்க முன்வர வேண்டும்.நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது புதிய புதிய வடிவில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. நீண்டகாலமாக போராடிப் பெற்ற உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சட்டப்படியான உரிமைகளை கொடுக்க 
மறுப்பது, சட்டத்தை மீறுவது கழகங்களில் அன்றாட நிகழ்ச்சியாகி உள்ளன. தொழிலாளிகளை குறைந்தபட்ச மனிதர்களாகக்கூட பார்க்காமல் இருக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. மத்திய-மாநில அரசுகளும் கழக நிர்வாகங்களும் தொழிலாளர்களை நசுக்கவும், அடக்கி ஒடுக்கவும் பார்க்கும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் 64வது பிறந்த நாளை யொட்டி (கரூர்) மாவட்ட அதிமுக சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்துள்ளன. இப்போட்டிகளின், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 21 மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற கபடி போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா 28.2.2012 அன்று சென்னையில் நடைபெற்றது.

அவ்விழாவில் முதலமைச்சர் பேசும் போது, “போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்கள் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனி அன்பு உண்டு. உங்கள் பணியே மிகவும் கடினமானது. இதற்கிடையில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றிருந்தார்கள் என்பதைப் பார்க்கும்போது மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது அன்பு கொண்டுள்ள முதலமைச்சர் அவர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்களின் மேற்குறிப்பிட்டுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நாம் எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?


AP அன்பழகன். 17.4.2012 தீக்கதிர் நாளிதழில்.

No comments:

Post a Comment