Wednesday 8 August 2012

போக்குவரத்துக் கழகத்தில் பணம் கொடுத்தால்தான் பணி நிரந்தரம்


பணம் கொடுத்தால்தான் பணி நிரந்தரம்: கேலிக்கூத்தாகும் முதல்வரின் அறிவிப்பு!
சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ கண்டனம்!
பணம் கொடுத்தால்தான் பணி நிரந்தரம் என்ற நிலையால் முதலமைச்சரின் அறிவிப்பு போக்குவரத்துக் கழகத்தில் கேலிக்கூத்தாக்கப்படுகிறது. இத்தகைய ஊழல் நடவடிக்கைகளுக்கு சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- 1986ம் ஆண்டு ஒப்பந்தப்படி தமிழக அரசுக்கு சொந்தமான போக்குவரத்துக் கழகங்களில் பணிக்கு சேரும் தொழிலாளர்கள், ஓராண்டில் 240 நாட்கள் தொடர்ச்சியாக பணிபுரிந்தால் பணி நிரந்தரம்
செய்யப்பட வேண்டும். 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ள இவ்வொப்பந்தத்திற்கு புறம்பாக கடந்த திமுக ஆட்சியில் ரிசர்வ் என்ற பெயரில் தொழிலாளர்கள் பணிநியமனம் செய்யப்பட்டனர். இத்தொழிலாளர்கள் 3 ஆண்டு 4 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த நிலையிலும், இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வில்லை. இவர்களுக்கு ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கப் படுவதில்லை. 2012 ஜனவரியிலிருந்து ஓட்டுநருக்கு ரூ.437ம் நடத்துநருக்கு ரூ.431ம் வழங்கப்பட வேண்டும். ஆனால் சென்னையில் ஓட்டுநருக்கு ரூ.266ம் நடத்துநருக்கு ரூ.265ம் வழங்கப்படுகிறது. இதர கழகங்களில் இது முறையே ரூ.230, ரூ.229 தான் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ரூ.200க்கு மேல் குறைத்து வழங்கி தொழிலாளர்கள் ஏமாற்றப் படுகிறார்கள். அனைத்து ரிசர்வ் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்தப்படியான சம்பளம் வழங்க வேண்டும் என சிஐடியு தொடர்ச்சியாக அரசுக்கு கோரிக்கை எழுப்பி வருகிறது. அதிமுக அரசு பதவி ஏற்றவுடன் போக்குவரத்து அமைச்சரை சந்தித்து இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. அதன் பின்பும் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படாத நிலையில், பணி நிரந்தரம், பென்சன் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 2012 ஏப்ரல் 18ம் தேதி பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் கோட்டை நோக்கி பேரணி நடத்தி அரசிடம் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மேற்கண்ட பின்னணியில் கடந்த 9-5-2012ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் போக்குவரத்துத்துறை சம்பந்தமாக விதி 110ன் கீழ் முதலமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் நீண்ட காலம் ரிசர்வ் தொழிலாளர்களாக பணிபுரியும் 4511 ஓட்டுநர்களையும், 4558 நடத்துநர்களையும், 88 தொழில்நுட்ப பணியாளர்களையும் சேர்த்து மொத்தம் 9157 தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்வதாக அறிவித்தார். முதலமைச்சரின் அறிவிப்புக்கு பின்பும் இத்தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வேலூர் மண்டலத்தில் இத்தொழிலாளர்களிடம் ரூ.12ஆயிரம் கையூட்டு பெற்றதாக வந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ரூ.3லட்சத்து 36ஆயிரம் கைப்பற்றப் பட்டதுடன், மண்டல பொது மேலாளர், உதவி மேலாளர், துணை கண்காணிப்பாளர், பொது மேலாளரின் ஓட்டுநர் ஆகியோர் மீது வழக்கும் பதிவு செய் யப்பட்டுள்ளது.
இச்சம்பவங்களுக்கு பின்பும், தமிழகம் முழுவதும் இத்தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் அறிவித்தபடி உத்தரவு வழங்கப்படவில்லை. தற்போது இத்தொழிலாளர்கள் உத்தரவு பெற வேண்டுமென்றால், ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டுமென ஆளும் கட்சியினரால் நிர்ப்பந்தப்படுத்தப் படுகின்றனர். அதிகாரிகளும் ஆளும் கட்சியினர் கூறினால்தான் உத்தரவு கொடுக்க முடியும் என கூறுகின்றனர். தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்து சுமார் 3 மாத காலமாகியும் அவரது உத்தரவு கூட போக்குவரத்துக் கழகங்களில் அமலாக்கப்படவில்லை. பணம் கொடுத்தால் தான் முதலமைச்சர் உத்தரவு கூட அமலாகும் என்கிற அளவுக்கு போக்குவரத்துக் கழகங்களில் ஊழல் பெருகி வருகிறது.
இந்நடவடிக்கைகளை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது. முதலமைச்சர் அறிவித்த அடிப்படையில் அனைத்து ரிசர்வ் தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசையும், போக்கு வரத்துக் கழக நிர்வாகங்களையும் சிஐடியு கேட்டுக் கொள்கிறது. பொதுத் துறை போக்குவரத்துக் கழகங்களை சீரழிக்கும் அடிப்படையில் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment